Wednesday, July 20, 2011

ஆடி 1... எங்க ஊரிலே சுட்டத் தேங்காய்...!!

    ஆடி மாசம் வந்தாச்சு.. ஆடி 1 வரப் போகுதுன்னாலே.. புதுசா கல்யாணம் ஆனவங்களும்..மாமனார் வீட்டுச் சீரும் தாங்க எல்லோருக்கும் ஞாபகம் வரும்..!! ஆனா எங்க ஊரிலே ஆடிக் கொண்டாட்டம் சிறுசுலேர்ந்து பெருசு வரை எல்லோருக்கும் உண்டு..!! அதுலயும் பள்ளிக்கூடப் பருவத்துல நாங்க போட்ட ஆட்டம் இருக்கே..!! இன்னைக்கு நகரத்து வாழ்க்கைல எத்தனைக் குழந்தைகளுக்கு இந்த சந்தோஷம்லாம் கிடைக்குதுன்னு என்னால சொல்ல முடியல.. ஆனா இந்தக் கொண்டாட்டத்தை இங்க பகிர்ந்துக்கறதுல என்னோட அந்த நாட்களை திரும்பிப் பார்க்கற சின்ன சந்தோஷம் எனக்கு!!
எங்க ஊரிலே ஆடி 1 –ஐ தேங்காய் சுட்டுக் கொண்டாடுவோம்..!! தேங்காய் சுடுறதுன்னா.. தோப்பிலேத் தோட்டக்காரர் இல்லாதப்போ தேங்காய் திருடுறது இல்லைங்க.. நாங்கக் கொஞ்சம் நல்லப் பிள்ளைங்க..!!
ஆடி 1 அன்னைக்கு காலைல இருந்தே நாங்க ரொம்ப பிஸி.. அப்பா, பெரியப்பா தோட்டத்துக்குக் கிளம்பும்போதே.. நாங்க.. அண்ணா தம்பி அக்கா தங்கை, அக்கம்பக்கத்து வாண்டுங்கன்னு ஒரு படையே கிளம்பித் தோப்புக்குப் போவோம்..!! பொதுவாவே விளையாடுறது அங்கேதான்.. ஆனா இன்னைக்குத் தனி ஜாலி.!!
அங்க சாயந்தரம் சுடுறதுக்காக.. இளநியும் இல்லாம முத்தலும் இல்லாமப் பதமாத் தேங்காய் அறுப்பாங்க. எங்கப் படைக்கு இளநியும் கொடுப்பாங்க.. குடிச்சுட்டு சுடுறதுக்கானத் தேங்காய்ங்களையெல்லாம் பொறுக்கி ஆளுக்கு ரெண்டாத் தூக்கிட்டு வீட்டுக்கு ஓடி வருவோம்..!!
அடுத்து அண்ணன்ங்க (கொஞ்சம் பெரியப் பசங்க!!) எல்லாரும் கிளம்பும்போது, நாங்களும் ஒட்டிப்போம்.. ஏரிக்கரைக்குப் போவோம்.. அங்க இருக்க அலிஞ்சி மரத்துல தான் அண்ணன்ங்க ஏறி தேங்காய் சுட குச்சிகள வெட்டுவாங்க.. நாங்க ரொம்ப சுறுசுறுப்பா அவங்க வெட்டிப் போடுறக் குச்சிகளப் பொறுக்கி எடுத்து வைப்போம்.. அப்பவே ‘இந்த குச்சி எனக்குத்தான்.. உனக்குத்தான்’ –னு சண்டைக் கூட வரும்..!! எப்படியோ சமாதானமாகி வீடு வந்து சேருவோம்..!!
வீட்டு வாசல்லே அப்பா அண்ணனெல்லாம் உட்கார்ந்துத் தேங்காய்களை உறிச்சு, குச்சிகளை செதுக்கி வைப்பாங்க..!! அப்போ ‘கத்தி பட்டுடும்.. பக்கத்துல வராதீங்க’ –னு கத்திட்டே இருப்பாங்க நம்மப் பெரிசுங்க..!! நமக்கோ ஆர்வக் கோளாறு... சுத்தி சுத்தி வந்து வாங்கிக் கட்டிப்போம்..!!


ஒரு வழியா மதியம் தாண்டிடும்.. இனி அம்மாங்க டிபார்ட்மெண்ட்..!!
‘அம்மா..அம்மா’ –னுப் பின்னாடியே சுத்துவோம்.. அவங்களும் ‘கழுதைங்க.. தொண்டைக் காயக் கத்தினாலும் வீட்டுக்கு வராதுங்க.. இன்னைக்குப் பின்னாடியே சுத்துறதப் பாரு’ –னு மனசுக்குள்ளயே நினைச்சுட்டுக் கொஞ்சம் அலைய விடுவாங்க..!!
கடைசியாப் போனாப் போகுதுன்னு (பாவப்பட்டு, இல்லேத் தொல்லைத் தாங்காம) கையிலே முறத்தோட வருவாங்க.. அந்த முறத்திலே, அவல், வெல்லம், எள்ளு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து எடுத்து வருவாங்க..!!
நாங்க எல்லாரும்... நான் நீன்னு போட்டிப் போட்டுட்டு சுத்தி உட்கார்ந்துப்போம்..! உறிச்சு வச்சத் தேங்காய்ல சின்னதா ஓட்டைப் போட்டு, பாதித் தேங்காய் தண்ணிய ஒருக் கிண்ணத்துல ஊத்திடுவாங்க..!! (அந்தத் தண்ணியத் திருட்டுத்தனமா ஆளுக்குக் கொஞ்சமாக் குடிச்சுடுவோம்ங்கறது ஊரறிஞ்ச ரகசியம்!!)

ஓட்டை போட்டத் தேங்காய்ல, கலந்து வச்ச அவலை நெரப்புவோம்.. அதுக்கும் நான் நீன்னு போட்டி வரும்.. எப்படியோ அடிச்சு புடிச்சு.. கீழே பாதி உள்ளே பாதிக் கொட்டி.. அள்ளி.. அம்மாங்கக் கிட்டேத் திட்டு வாங்கி...(சமயத்துல அடிக் கூட விழும்.. அந்த அடிக்கு நாங்க வச்ச பேரு ‘ஆடி பூசை’) எல்லாத் தேங்காய்ங்களையும் நெரப்பிடுவோம்..!!



அப்புறம், செதுக்கி வச்ச அலிஞ்சு குச்சுகளால நெரம்பினத் தேங்காய்ங்கள அடைச்சுடுவாங்க.. அது மேல மஞ்சளும் பூசி வைப்பாங்க..!!

அப்பாடா.. ஒரு வழியா..சுடுறதுக்கு தேங்காய் ரெடி... ஆளுக்கு ஒரு தேங்காயைத் தூக்கிட்டுத் தோட்டத்துக்கு ஓடுவோம்.. (யாருக்கு எந்தத் தேங்காய்ங்கறது அடுத்த சண்டை..திரும்ப ‘ஆடி பூசை’ கிடைக்கும்).

பெரியவங்களாம் சேர்ந்து, விறகு சருகு குவிச்சு, நெருப்பு மூட்டுவாங்க.. ‘நான் முதல்லே..நீ முதல்லேன்னு’ போட்டி போட்டுத் தேங்காயை நெருப்பிலேக் காட்டுவோம்.. யார் தேங்காய் முதல்லே வெடிக்கும் –னு அடுத்தப் போட்டி.. ‘ஏய்..கோணத் தேங்காய்’.. ’தோ..ஊமைத் தேங்காய்’ னு சின்னப் பிள்ளைத் தனமானக் கிண்டல் கேலின்னுப் போகும்..
ஒரு சிலத் தேங்காய் குச்சிலேர்ந்துக் கலண்டு நெருப்பிலே விழுந்திடும்.. அவங்க ஜெயிக்க முடியாது.. ஓடு வெடிச்சா தேங்காய் வெந்திருக்கும்.. முதல்லே வெடிக்கற தேங்காய் யாருதோ.. அவங்க ஜெயிச்சதா எங்க சங்கம் ஒத்துக்கும்.. நடுவரா யாராது பாட்டிங்க இருப்பாங்க.. (அவங்களுக்கு வேறென்ன வேலை.. வந்துடுவாங்க நாட்டாமை பண்ண!!)

அப்புறம்.. ஜெயிச்சவங்க தோத்தவங்களக் கிண்டல் பண்றது.. அவங்கத் திரும்பக் கேலிப் பண்றது.. அழறது.. சமாதானப் படுத்தறதுன்னு... சுட்டத் தேங்காய்ங்களோட வீடு வந்து சேருவோம்..
அந்தத் தேங்காய்களுக்கு கற்பூரம் பொருத்தி.. சாமி கும்பிட்டு....
அப்புறம் என்ன... சுட்டத் தேங்காயை ஓடு உடைச்சு.. சாப்பிட வேண்டியதுதான்..!! அத்தனைப் போட்டி.. சண்டைங்களையும் தாண்டி.. வெக்கமே இல்லாம.. சாப்பிடும்போது சேர்ந்துப்போம்.. ஹி ஹி ஹி..!!!

(பி.கு.:: பல வருஷங்களுக்கு முந்தைய இந்த நாள் கொண்டாட்டம், இன்று இல்லை.. அந்த நண்பர்களையும் நாட்களையும் தொலைத்த ஏக்கம் எனக்குள் உண்டு.. அவர்களில் பலர், மின்னஞ்சல்களிலும், வலை ஊடகங்களிலும் தொடர்பில்லாதவர்கள்.. பலரது பெயர்கள் கூட மறந்துபோய் விட்டன.. கல்வியின்றி பிழைப்புத் தேடி எங்கோத் தொலைந்து போன அவர்கள், எங்கிருந்தாலும் இந்த நாள்..இந்த நினைவுகளை வீசிப் போகும் என்ற நம்பிக்கையுடன்.. அன்றைய நினைவுகளையும் இன்றைய புகைப்படங்களையும் பகிர்கிறேன்!!)