Sunday, December 30, 2012

கண்ணீர் நதிகள்..



பதிமூன்று நெடிய நாட்கள் போராடியப் பின் பரலோகம் சென்றுவிட்டாளாம் அந்தப் பெயர் மறைக்கப்பட்டப் பாவை. எல்லா செய்திகளிலும் டெல்லி என்ற பெயரோடு பிரிக்க முடியாதவளாகி விட்டாள் இந்தப் பதிமூன்று நாட்களில். பெரும்பாலானோர் பெண்ணியம் பேசுகின்றனர்; பேசாமல் கருந்துணியால் வாய்கட்டிப் போராடுகின்றனர் சிலர்; கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கலவரம் செய்கின்றனர் சிலர்; மொத்தத்தில் கலையிழந்து தலைக்குனிந்து நிற்கின்றது தலைநகரம்!

காலையில் முதல் செய்தியாக ‘அவள் இறந்து விட்டாள்’ என்றுக் கேட்டதுமே, காதுகளின் வழியாக இதயத்திற்குள் ஒரு இனம் புரியாத அமைதி பரவியது என்னவோ உண்மை. கனவுகள் சுமந்த அவள் கண்கள் இனி கலங்கித் தவிக்கத் தேவையில்லை; கசக்கி எறியப்பட்டத் தன் பூவுடலின் நசநசப்பை இனி அவள் உணரத் தேவையில்லை; இருபத்தி மூன்று வருடம் சீராட்டிப் பாதுகாக்கப்பட்டத் தன் பெண்மை இருளில் சூறயாடப்பட்ட அந்த நிமிடங்கள் அவள் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப் போவதில்லை; தன் உடலின் எந்தெந்த உறுப்புகள் இருக்கின்றன எந்தெந்த உறுப்புகள் உருக்குலைக்கப் பட்டிருக்கின்றன எனத் தெரியாமல் அலைப்புறத் தேவையில்லை; இன்னும் எத்தனை நாள் இந்த வலியும் வேதனையும் என்றெண்ணி அஞ்சத் தேவையில்லை; மருத்துவமனையையும் நீதிமன்ற வளாகத்தையும் தாண்டிய பின், எத்தனையோ வழக்குகளைப் போல இந்த வழக்கும் வெறும் கோப்புப் பதிவாக மாறிய பின் சமுதாயப் புறக்கணிப்பை எண்ணி அஞ்சத் தேவையில்லை. இன்னும் எத்தனையோ ‘தேவையில்லை’கள். நாடே கூடி எதிர்த்தாலும் நெஞ்சறிய நினைக்கிறேன்.. ‘நல்லவேளை அவள் இறந்துவிட்டாள்’ !

2005-ம் ஆண்டு இதே தெற்கு டெல்லியில் ஒரு காரில் இதே போல் கடத்தப்பட்டு கயவர்களால் கசக்கியெறியப் பட்டாள் ஒரு இளம்பெண். அடுத்த நாள் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள், குற்றவாளிகளும் பிடிபட்டனர். அவள் காயங்கள் ஆறும் வரை உடல் தேறும் வரை, வழக்குகள், விசாரணைகள், போராட்டங்கள் எல்லாம் நடந்தன; குற்றவாளிகளுக்கு ‘அதிக பட்ச’ தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஆனால் அந்தப் பெண்..??!! சுயநினைவு என்பது இன்று வரை அவள் வசம் இல்லை. சராசரிப் பெண்ணாக வாழத்தான் துடிக்கிறாள், ஆனால் அவள் மனமோ சதா தன் பெண்மை களங்கப்பட்ட நிமிடங்களையே சுற்றி சுற்றி வருகிறது. சிலநேரம் சாதாரணமாக இருப்பவள் சிலநேரம் சுவற்றில் தன் தலையை மோதிக் காயப்படுத்திக் கொண்டுக் கதறுகிறாள். ஏழு ஆண்டுகளாக ஒரு கண்ணீர் நதியாகவே ஓடிக் கொண்டிருக்கின்றாள்!

2010-ம் ஆண்டு.. இதே தெற்கு டெல்லி.. ஒரு வேனில் கடத்தப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டாள் இன்னொரு இளம்பெண். இங்கும் அதே நிலைதான். வழக்கு, விசாரணை, குற்றவாளிகள் கைது, தண்டனை.. எல்லாம் நடந்தது. ஆனால் உடல் தேறிய பின்னும் அவள் மனம் தேறவேயில்லை. செய்தியின் சூடு தணியும் வரை வேகம் காட்டும் நம் சமுதாயம், அதற்குப் பின் செய்வதுதான் என்ன? அந்தப் பெண்ணை மதிக்க வேண்டாம், மரியாதை கொடுக்க வேண்டாம்.. குறைந்தபட்சம் அவளை வாழத் தகுந்த ஒரு உயிராகப் பார்க்கலாமே.. ஆனால் சமுதாயம் அவளிடம் வீசிச் செல்வது பெரும்பாலும் ஏளனப் பார்வைகளையே.. மிகச் சொற்பமாகப் பரிதாபப் பார்வைகள்.. ஆனால் இவை இரண்டுமே அவளை நடைபிணமாக மாற்றியனவேயன்றி வேறு எந்தப் பயனுமில்லை. அவளுமொருக் கண்ணீர் நதியானாள்!

இன்று 2012.. இதோ இன்னொரு சம்பவம்.. கடத்தப்பட்டது பேருந்தில். ஒவ்வொரு சம்பவத்திலும் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மட்டுமே மாறியிருக்கின்றது, மற்றபடி ஒரு பேதமுமில்லை. ‘மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்’ என்று செய்தி கேட்டதும் மனம் ஊமையாய்க் கதறியது ‘அய்யோ.. இன்னுமோரு கண்ணீர் நதியா?’ என்று. கருணையற்றக் காமுகர்களால் கிழித்து நாராக்கப்பட்டு, மருந்துகளால் உயிர் தேக்கப்பட்டு, அறுவை சிகிச்சைகளால் மேனி தைக்கப்பட்டு, கசந்த நினைவுகளால் மனம் பேதலிக்கப்பட்டு.. இன்னும் எத்தனை ரணங்கள் பட்டாளோ? காந்தி சொன்னக் கருணைக் கொலை காயம்பட்டக் கன்றுக்குட்டியை விட கற்பழிக்கப்பட்டப் பெண்ணுக்கு இன்னும் பொருந்துமோ? ஆனால் இவள் வரம் வாங்கி வந்தவள் போல.. உடல் சிதைந்து உள்ளம் மரித்தபின், கண்ணீர் நதியாக அலைப்புற்று இவள் பயணித்தது வெறும் பதிமூன்று நாட்களே! இதோ.. வலிகளையும் வேதனைகளையும் உதறிவிட்டுக் காலனென்னும் கடலில் சேர்ந்துவிட்டாள்.. அதன் ஆழத்தில் அமைதி கொள்ளட்டும் இந்தக் கண்ணீர் நதி..!

Sunday, December 2, 2012

ஊமைப் பறவை..

உதிரும் இறகுகள் ஒவ்வொன்றையும்
உத்தேசமின்றியே சேகரிக்கும்
ஊமைப் பறவையைப் போல
உன்னோடு கழியும் ஒவ்வொரு கணத்தையும்
உள்ளத்தின் ஆழத்தில் புதைத்து வைக்கிறேன்
நினைவுப் பொக்கிஷமாக..!!