Wednesday, March 20, 2013

சில பன்னீர் பூக்களும் சில கண்ணீர் துளிகளும்..!



மேகங்கள் கைகோர்க்கும் செந்நிறப் பொழுதில்
மரங்கள் குடைவிரிக்கும் பச்சை வெளியில்
விரல்கள் நோக மீட்டிக் கொண்டிருக்கிறேன்
அரங்கம் காணாத வீணையொன்றை..!
என் மெளனப் புன்னகையை
மொழிபெயர்த்தன விரல்கள்..
தந்திகளால் உள்வாங்கி
சந்தங்களாகக் கசிந்தது வீணை..
மாருதம் மனதை மருக வைக்க
சாருகேசியாய் இசைந்தது நாதம்..
கவிழ்ந்து வந்த இருளில் மயங்கி
தவழ்ந்து தாழ்கிறது கீதம்..
பசித்து மயங்கிய மழலையின் சிணுங்கலாய்
கசிந்து கணத்து உருகுகிறது என் வீணை..
அதன் மீது தாளாது உதிர்கின்றன
சில பன்னீர் பூக்களும்
சில கண்ணீர் துளிகளும்..!!

Friday, February 22, 2013

சொல்லாமல்...



என் விழிகளின் அடியில்
விசனப்பட்டுக் கொண்டிருக்கின்றன
உன் காதல் பார்வைகள்..
என் விரல்களின் நுனியில்
விரதமிருந்து கொண்டிருக்கின்றன
உன் காதல் தொடுகைகள்..
என் நாக்கின் நுனியில்
நடைபயின்று கொண்டிருக்கின்றன
உன் காதல் மொழிகள்..
கள்ளத்தனமாகவே என்
உள்ளத்தில் உயிர்த்து
மெல்ல மெல்ல இனிக்கிறது
நீ சொல்லாமல் தவிக்கும்
நம் காதல்..!

Tuesday, February 19, 2013

நீயே என் பிரார்த்தனை..!



உயிர் குளிருமோர் பெளர்ணமி இரவில்
மயிர் கூச்செறியும் மந்தகாசத் தென்றலில்
வேங்குழலின் தீங்குரலும் கலந்திசைக்க
ஏங்குமென் பூமனமும் கசிந்துருக
கண்களில் நிறைந்து
கன்னங்களில் வழிகிறது
என் பிரார்த்தனை..
அதன் ஒவ்வொருத் துளியிலும்
மிதந்து மின்னிச் சரிகிறது
உன் பிம்பம்..!!

Sunday, February 17, 2013

நிலவின் நிழலோடு..



கதவுகள் இல்லாத
கண்ணாடி மாளிகைக்கு
கட்டாய விருந்துக்குப் போனேன்..!
முகங்களைக் காணவில்லை
முகமூடிகள் மட்டும் உலவிக்கொண்டிருந்தன..
அரிதாரம் பூசிய முகமூடிகளின் நடுவே
அருவருக்கப்பட்டது என் முகத்தின் நிர்வாணம்..!
தங்க மேசையில் வெள்ளித் தட்டுகளில்
தக்க அலங்காரங்களோடு பரிமாறப்பட்டன போலிகள்..
புளித்த போலிகளைப் புசித்த முகமூடிகள்
சுளித்த என் நெற்றியை வெறித்து நோக்கின..!
எண்ணப் பொய்களெல்லாம் மதுவாகி
வண்ணக் கோப்பைகளை நிறைத்தன!
கள்ளமெல்லாம் கவி பாட
முகமூடிகள் ஆடிக் கொண்டிருக்கின்றன..!
முறுபுறம் விரிந்த நந்தவனத்தில்
கருமலர்கள் பூத்த சோலையில்
விண்மீன்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிலவின் நிழலோடு..!!

கோப்பை நதி..!!




ஒருக் கோப்பை நதியின்
இருக் கரைகளாக நீயும் நானும்..
சத்தமின்றி சலசலத்துப் போகிறது நதி..
சஞ்சலங்களோடுக் கரைந்துப் போகிறோம் நாம்..!