Sunday, April 25, 2010

மறக்க முடியாத மௌனங்கள்!

முதல் முறை உன்னைப் பார்த்த பொழுது
புன்னகையோடு முடிந்த மௌனம்!
நீ என்னிடம் பேசியபொழுது
மகிழ்வோடு முடிந்த மௌனம்!
நட்போடு நாம் பழகிய நாட்களில்
நெஞ்சோடு நாம் வளர்த்த காதல் மௌனம்!
சொல்லலாமா வேண்டாமா என யோசித்து
தயக்கத்தின் வாசலைத் திறக்காத மௌனம்!
நீ சொல்வாய் என எதிர்பார்த்து
என்னை ஊமையாக்கிய மௌனம்!
நாம் பிரிந்து சென்ற பொழுதும்
நம்மை விட்டு பிரியாத மௌனம்!
எனக்கு மணம் முடிக்க ஆசைப்பட்ட தந்தையிடம்
சம்மதம் என்று சொன்ன மௌனம்!
உனக்கு அனுப்பிய என் அழைப்பிதழ்
முகவரித் தவறென்று திரும்பிய மௌனம்!
என் மகள் கையில் நீ தந்த ரோஜாச் செண்டு
'இது உனக்காக வாங்கியது' என்ற உன் கண்ணீரின் மௌனம்!
காலம் கடந்து விட்டதால் கலையாமல்
நம் கனவுகளுக்குக் கல்லறை கட்டிவிட்ட மௌனம்!

Saturday, April 24, 2010

ஒளியில்லா விளக்குகள்!!

"மரம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
 "பச்சை நிறத்திலிருக்கும்" என்றேன்..
"நிலவு எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"வெள்ளை நிறத்திலிருக்கும்" என்றேன்..
"கடல் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"நீல நிறத்திலிருக்கும்" என்றேன்..
"குயில் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"கருப்பு நிறத்திலிருக்கும்" என்றேன்..
"பவளம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
" சிவப்பு நிறத்திலிருக்கும்" என்றேன்..
"நிறம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
           -என்ன சொல்வேன்??!!

 அவள் கண்களையே பார்த்தேன்..
அவை ஒளியில்லா விளக்குகள்!!

Friday, April 23, 2010

நேசித்தலும் நேசிக்கப்படுதலும்..!!

அமைதியான அதிகாலைப் பொழுதில்
அரை மணி நேரப் பேருந்துப் பயணம்..
அங்கொருவரும் இங்கோருவருமாய்
அரைகுறைத் தூக்கத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தனர்..
நிறுத்தமொன்றில் பேருந்து நிற்க
எதையோ கைப்பற்றி விட்ட குதூகலத்துடன்
படிகளைப் பற்றி ஏறினாள் பாவையவள்...
ஐந்து வயதுதான் இருக்கும்..
ஏறிய வேகத்தில் ஓடி வந்து ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்..
மூச்சு வாங்கக் கூவினாள்...
"அண்ணா அண்ணா இங்க வா.."
அம்மாவின் கையைப் பிடித்தபடி வந்தான் அண்ணன்..
அண்ணனுக்கோ ஜன்னலோர இருக்கை மீது ஆசை போல..
"அபி அபி... நான் அங்கே உக்கார்ரனே..."
என்று கெஞ்சலும் கொஞ்சலுமாகக் கேட்டான்..
அந்த அபியும் செல்லக் கோபத்துடன் நகர்ந்து கொண்டாள்...
 அம்மா சில ரொட்டித் துண்டுகளை இருவருக்கும் கொடுத்தாள்...
அபி அவசர அவசரமாகத் தன் கையில் இருந்ததை சாப்பிட்டாள்..
அண்ணனோ அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அபி கேட்டாள்... "அண்ணா...இன்னும்..."
அவன் மொத்தத்தையும் அபிக்கே கொடுத்து விட்டு
சிரித்தபடியே சின்னதாய் ஒரு முத்தமும் கொடுத்தான்..
அபிக்கு ஜன்னலோரம் பிடிக்காமலும் இல்லை ..

அண்ணனுக்கு ரொட்டித் துண்டின் மேல் வெறுப்பும் இல்லை...
அவர்கள் இன்னும் வளரவில்லை.. வருத்தமும் இல்லை...
விவரம் தெரியவில்லை... விட்டுக்கொடுத்தலும் இல்லை...
நாம் வளர்ந்துவிட்டதாலோ என்னவோ...
அவர்களுக்கு புரிந்தது நமக்கு தெரியவில்லை...
உலகின் இரண்டு அரும்பெரும் சந்தோஷங்கள்...
நேசித்தலும் நேசிக்கப்படுதலும்..!!

Monday, April 19, 2010

தமிழும் தாலாட்டும்...

இந்த வார விடுமுறை...
சென்னை வெயில் பயமுறுத்தியது...
கூட்டைத் தேடும் குருவியாய்
வீட்டுக்கு ஓடினேன்...
வராமல் தொலையக் கூடாதா
என்று நினைக்க வைக்கும் கடன்காரனாய்
வந்து தொலைந்தது ஞாயிறு இரவு...
அரை மனதோடுக் கிளம்பிக் கொண்டிருந்தேன்...
பத்தரை மணிக்கு பேருந்து...
சென்னைக்குத் திரும்ப...
ஐந்து மாதமே ஆன அண்ணன் மகன் அழுது கொண்டிருந்தான்...
அவனை சமாதானப்படுத்தித் தூங்க வைக்க...
அம்மா பாடிக் கொண்டிருந்த தாலாட்டு
அரைகுறையாய்க் காதில் விழுந்தது..
"அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே...
 மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே...
தாத்தா அடிச்சாரோ தாழம்பூச் செண்டாலே..."
பலமுறைக் கேட்ட வரிகள்தான்...
புன்னகையோடுக் கேட்டுக் கொண்டே
எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்...

பலமுறைக் கேட்டிருந்தாலும் இன்று ஏனோ...
பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னும்
தாலாட்டு வரிகள் மனதோடு இசைந்துக் கொண்டிருந்தன...
தூங்க வைக்கும் தாலாட்டில்...
அத்தையும் மாமனும் தாத்தாவும்...
இன்ன பிற புரியாத உறவுகளும் ஏன்??
எந்தக் குழந்தைக்குப் புரியப் போகின்றன இந்த உறவுகளெல்லாம்??
கொஞ்சம் நான் தாலாட்டு கேட்ட நினைவுகள் நிழலாடின...
அன்று எனக்கும் எதுவும் புரிந்ததில்லை...
இன்று வரை சிந்தித்துக் கூட பார்த்ததில்லை...
பின் எதற்கு தாலாட்டில் உறவுகள்... தேவையில்லாமல்??
என்ன தாலாட்டோ... கேட்க நன்றாயிருக்கிறது... வேறோன்றுமில்லையதில்...
சுரத்தின்றி யோசனை ஓடுகையில்...
திடீரென்று தோன்றியது...
'அடடே... சித்தி கொடுத்தனுப்பிய பணியாரம்

நன்றாயிருந்ததே... சித்தியிடம் சொல்லவே இல்லையே...'
கைப்பேசியை எடுத்து சித்தியிடம் கொஞ்சம் கொஞ்சி விட்டு...
அவர்களின்....'கவனம்...பார்த்து போயிட்டு வாம்மா...'
எல்லாம் கேட்டு விட்டு கைப்பேசியை அணைத்தால்...
தொடர்ந்து வந்தது மாமாவின் அழைப்பு...
மீண்டும் அதே 'கவனம்...பார்த்து போயிட்டு வாம்மா...'
பேசி முடித்து இருக்கையில் சாய்ந்தேன்...
பேருந்து புறப்படத் தயாராக இருந்தது...
மனது மெதுவாகக் குரல் கொடுத்தது...
தாலாட்டில் உறவுகள் ???
தசையோடு தாய் கலந்திட்ட உணர்வுகள்...
புரியாமல் போயிருந்தாலும்...
பிரியாமல் தொடரும் பந்தங்கள்...
தேவையான எல்லாம் வாங்கலாம் சென்னையில்....
எதைத் தேடி ஓடி வருகிறேன் எதுவுமில்லாத கிராமத்திற்கு??
என்றோக்  கேட்டத் தாலாட்டில்...
என் நரம்புகளோடு பின்னி விட்ட உறவுகளைத் தேடி..!!

பேருந்து சென்னையை நோக்கி புறப்பட்டது...
நானும் உறங்கத் தொடங்கினேன்..
பின் திசையில் தலாட்டைத் தேடியபடி!!

Wednesday, April 14, 2010

தமிழர் என்றோர் இனமுண்டு..

நகரத்தோடு வாழ்க்கை ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு...
மென்பொருள் நாகரீகத்தில் பங்கு போட்டுக் கொண்டு...
மின்னஞ்சல்களுக்குப் பின்னே மிக வேகமாகத் தொலைந்து கொண்டிருந்தாலும்...
ஏதாவது வாரக் கடைசிகளில் என்னை நானே மீட்டுக் கொள்ள
எனது சொந்த ஊருக்குச் செல்வதுண்டு...
அந்த வாரமும் அப்படிதான்...
கோடையின் கொடுமை சென்னையில் தொடங்கியிருந்தது...
கிராமமும் ஒன்றும் குளுமையாக இல்லை...
ஆனால் இளைப்பாறத் தோப்புகள் இருந்தன...
தென்னந்தோப்பில் இளநீரை ருசித்தபடி உட்கார்ந்திருந்தேன்...
அந்த தோப்பின் ஒரு மூலையில் ஒரு குடிசை உண்டு...
யாரோ ஒரு முதியவரும் அவர் மனைவியும் அங்கே இருப்பார்கள்...
யாரென்று தெரியாது...
ஆனால் நான் போகும்போதெல்லாம் நேசத்தோடு நலம் விசாரிப்பார்கள்.
அந்த அம்மாவுக்கு காது சரியாகக் கேட்காது.
அன்று அந்த முதியவர் எங்கோ வெளியே சென்றிருந்தார் போல..
காலை நேரம் முடியும் முன்னே வெயில் சுடத் தொடங்கி இருந்தது..
அந்த அம்மா குடிசைக்குள் சமைத்துக் கொண்டிருந்தார் போல..
வெளியே சென்றிருந்த முதியவர் களைப்புடன் வந்து செருப்பைக் கழற்றினார்..
திடீரென்று எதைப் பார்த்தாரோ தெரியவில்லை...
கழற்றிய செருப்பைக் கூடப் போடாமல்
சுடும் வெயிலில் காட்டு வரப்பில் ஓடத் தொடங்கினார்..
ஒன்றும் புரியாமல் எங்கே ஓடுகிறார் எனப் பார்த்தேன்...
காட்டில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு
உடனிருந்தக் குட்டிகளை கையில் தூக்கிக் கொண்டுக் குடிசையை நோக்கி ஓடி வந்தார்...
தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்ததும்
குட்டிகளைக் கீழே விட்டு சொன்னார்...
"ஓடு சாமி...தண்ணிக் குடிங்கடா ... ரொம்ப சுட்டுடுச்சா கண்ணுங்களா.."
குட்டிகளும் துள்ளித் துள்ளி அவரை சுத்திக் கத்திக் கொண்டே
தண்ணீர் தொட்டிக்கு ஓடின...

இன்னமும் ஏதேதோ சொன்னார்...
ஆனால் அதற்கு மேல் வார்த்தைகள் ஏதும் காதில் விழ வில்லை
அவர் குரலில் இருந்த குற்ற உணர்வும் பாசமும்
நினைவை விட்டு அகலவே இல்லை!
" தமிழர் என்றோர் இனமுண்டு.. தனியே அவர்க்கோர் குணமுண்டு!"
இந்த வரிகளை எழுதியவன்...
கண்டிப்பாக அதற்குமுன் தமிழ் கிராமங்களுக்கு சென்றிருப்பான்...
இவரைப் போன்றவர்களைக் கண்டிருப்பான்..!!