Monday, August 1, 2011

கனவில் வந்தக் கடவுள்!


மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை விடியல். வழக்கமாக ஊருக்குப் போகும் வெள்ளிக்கிழமைகளைப் போலவே இன்றும் பளிச்சென விடிந்தது. தொழில்நுட்பக் கல்வி முடித்து, மென்பொருள் கனவுகளோடும், ஐந்திலக்க ஆரம்பச் சம்பளத்தோடும், சொந்த ஊரை விட்டுச் சென்னையில் குடியேறிய பல லட்சம் பேரில் நானும் ஒருத்தி! மூன்று வருடங்களில் சென்னை வாழ்க்கையோடும், மென்பொருள் நாகரிகத்தோடும் பொருந்தி விட்டிருந்தாலும், சொந்த ஊருக்குப் போகும் நாளில் வரும் உற்சாகமேத் தனிதான். முடிந்த அரையாண்டுக்கான சம்பள உயர்வில் வீட்டில் எல்லோருக்கும் எதையாவது வாங்கிப் பெட்டியில் அடுக்கியும் ஆயிற்று. அம்மா சொன்னபடி ஒரு நூறு ரூபாய் உண்டியலுக்காக எடுத்துத் தனியேக் கைப்பையில் வைத்தேன்.
      இதோ மாலையும் வந்து விட்டது. இழுவைப் பெட்டியும் பையுமாக எழும்பூர் இரயில் நிலையத்தை அடைந்தேன். இன்னும் இரயில் புறப்பட ஒரு மணி நேரமிருந்தது. முதல் நடைமேடையிலேயே அமர்ந்தேன். இரயில் நிலைய நடைமேடைகள் சுவாரசியமான நாடக மேடைகள்!! பலவித மக்கள்.. மாறுபட்ட நடை உடை பாவனைகள்.. எத்தனையோ முகமூடிகள்.. வித்தக ஒப்பனைகள்.. எல்லாமும் ஒரே நேரத்தில் அரங்கேறுவது இங்கேதான்! கண்களை அலையவிட்டு, செவிகளைத் தீட்டிக் காத்திருந்தேன்.. இன்றைய சுவாரசியத்திற்காக..
      சிறிது நேரத்தில் எனக்கு அடுத்தக் கல்மேடையில் அயர்வுடன் வந்தமர்ந்தார் ஒரு முதியவர். அவரது சிவப்புச் சட்டையும், மங்கிய வேட்டியும், தோளில் கிடந்தத் துண்டும், அவர் ஒரு இரயில் நிலைய சுமைதூக்கி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டின. இரண்டு நிமிடங்கள் கண்களை அமர்ந்திருந்தவர் திடீரெனத் தவம் கலைந்தவராய் வெகு வேகமாக அருகிலிருந்த நீர் குழாயிடம் சென்றார். முகத்தை நீரால் அழுந்தத் துடைத்து விட்டு, அதே குழாய் நீரை தாகத்தோடு அருந்திவிட்டு நுழைவாயிலருகே ஓடினார்.
      ஏதோ உணர்வு உந்த, மனதில் தோன்றியப் புரியாத சிறு வலியுடன் அவரையேக் கவனித்தேன். போவோர் வருவோரிடமெல்லாம், “சார்.. பெட்டி..”, “மேடம்.. பெட்டி..” என்றுச் சுமைதூக்கக் கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்தச் சுமைதூக்கி!
      இழுவைப் பெட்டிகள் நாகரிகமாகிப் போன இந்நாளில், சுமைதூக்கிகளின் தேவைக் குறைந்துதான் போயிற்று என்ற எண்ணம் ஓடியது. எங்கிருந்தோ வந்தான் அந்தச் சிறுவன், பத்து வயதிருக்கும். நேரே அவரிடம் வந்து “தாத்தா!” என்றான். திரும்பியவர் பரிவோடு அவனிடம், “என்னடா, இங்கே எதுக்கு வந்தே?” என்றார். ‘பேரன் போல’ என்று நினைத்தவாறே உரையாடலை உற்றுக் கவனித்தேன்.
      “அம்மாதான் அனுப்பிச்சு தாத்தா! வீட்டுல அரிசி இல்லயாம், உங்கக்கிட்டக் காசு வாங்கி அரிசியும் ஆயாவுக்குக் கஞ்சி காய்ச்ச ஆரியமும் வாங்கிட்டு வர சொன்னிச்சு. காசு கொடு தாத்தா!” என்றான். “கொஞ்சம் இங்க உட்காருடா.. காசு இன்னும் வாங்கல.. யாரும் பெட்டித் தரல.. எப்படியாது சீக்கிரம் வாங்கித் தரேன்” என்றவர் சொன்ன போது.. இயலாமையின் வலி அவர் முகத்தில் மின்னி மறைந்தது, ஒரு பெருமூச்சோடு!
      மீண்டும் அங்கும் இங்கும் அலையத் தொடங்கினார். சில நிமிடங்கள் கரைந்தது. ஒரு முடிவோடு என் இழுவைப் பெட்டியின் நீளப் பிடியை மடக்கி விட்டு எழுந்தேன். சற்றுத் தொலைவில் அலைந்துக் கொண்டிருந்தவரை ‘தாத்தா’ என உரக்க அழைத்தேன். விரைவாக ஓடி வந்தவரின் கண்களில் தெரிந்தது எதிர்பார்ப்பா, நிம்மதியா, வலியா, சந்தோஷமா?- இனம் காணத் தெரியவில்லை. பெட்டியைக் கொடுத்து “ஏழாவது ப்ளாட்ஃபார்ம்-ஏ1-45, எடுத்து வருவீங்களா?” என்றேன். மிக வேகமாக “வாங்க மேடம்” என்றவாறே பெட்டியைத் தூக்கினார். அவர் நடையில் முதுமையும், உழைப்பின் உரமும் ஒன்றாகத் தெரிந்தது.
      வேகமாக இருக்கையை அடைந்தவர், பெட்டியை நிதானமாக இருக்கைக்கடியில் வைத்தார். கைப்பையில் இருந்த உண்டியல் காசு நூறு ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டினேன். “சில்லரை இல்லைங்க மேடம்” என்றார். “இல்லைன்னா பரவால்லே, வச்சுக்கோங்க!” என்றேன். “அய்யய்யோ! வேண்டாங்க மேடம். உழைப்புக்கு மீறின ஊதியம் தங்காது, அது பாவம்!  ஒரு இருபது ரூபாய் இருந்தாத் தாங்க” என்றார். இரண்டு பத்து ரூபாய் தாள்களை அவரிடம் நீட்டி விட்டு எனதுப் படுக்கையில் படுத்தேன். சற்று நேரத்தில் இரயில் கிளம்பியது, அதன் தாலாட்டில் கண்ணயர்ந்தும் போனேன்.
      எவனோ ஒருவன் அருகில் வந்தான்.. “நன்றி!” என்று சிரித்தான். “யார் நீ? எதற்கு நன்றி?” எனக் கேட்டேன். “நான்தான் கடவுள்! நன்றி நீ கொடுத்த கஞ்சிக்கு!” என்றான். “நான் எப்பொதுக் கொடுத்தேன் கஞ்சி?” எனக் கேட்டேன். “கஞ்சிக்குக் காசுக் கொடுத்தாயே... மறந்து விட்டாயா? இருபது ரூபாய்..” சிரித்தான் கடவுள்.
      திடுக்கிட்டுக் கண் விழித்தேன்...! அட... கனவு..! எத்தனையோ நூறு ரூபாய்களைப் போட்டிருக்கிறேன் உண்டியலில்.. அன்றெல்லாம் வராதக் கடவுள்.. இன்று மட்டும் ‘நன்றி’ எனச் சிரிக்கிறான்..??!! நேரம் நடுநிசியைத் தாண்டி இருந்தது. இரயிலின் தடதடப்போடு... நெஞ்சமும் தடதடத்தது.. ‘இந்நேரம் அந்த சுமைதூக்கி வீட்டில் எல்லோரும் கஞ்சியாவது குடித்திருப்பார்கள்!!!’

No comments:

Post a Comment