Sunday, August 7, 2011

தேவதைகள் ஆண்டக் காலம்!


[கடைசியாக சொந்தக் கிராமத்திற்குப் போன போது, காலை நேர ஏகாந்தத்தைக் கண்ணார அனுபவிக்க வீட்டு மொட்டை மாடிக்குப் போனேன்... கருவேல மரங்கள் நிறைந்த எங்கள் ஊர் ஏரி, பசுமை இழந்தக் கைம்பெண்ணாகக் காட்சியளித்தது. சிலபல வருடங்களுக்கு ஒருமுறை ஏரிமரங்களை ஏலம் விட்டு வெட்டுவார்கள். என் நினைவறிய மூன்று நான்கு முறை அரங்கேறியிருக்கிறது இந்த மரம் வெட்டுதல்! அந்த முதல் மர வெட்டுதலுக்கு முன் சில வருடங்கள் நட்பின் முதல் ஸ்பரிசத்தோடு என் நினைவில் என்றும் பசுமையோடு இருப்பவை. ஒவ்வொரு மர வெட்டுதலும் என் கண்முன் அந்த சில வருடங்களைக் காட்சியாக்கி விட்டுப் போகும். அது பள்ளி, வீடு, விடுமுறை, விளையாட்டு.. இவைத் தவிர வேறு அறியாத நட்புக் காலம்..! மீண்டும் அந்த நட்புக்காலத்தைத் தரிசிக்க நடந்தேன்.. கருவேல ஏரியை நோக்கி.. தரிசனம் வரிவடிவாக...]
 விடுமுறையின் ஒவ்வொரு வினாடியும் விழாக்காலம்..
வீட்டு வாசல்.. விளையாடும் வேப்பமர நிழல்...
இங்கே தான் தொடங்கும் எங்கள்
பூவா தலையா ஆட்டம்..!
ஏரிக்கரைக்குப் போகும் வயல்வெளி வரப்புகள்
வீட்டு வாசலின் முன்னே..
ஏரியிலிருந்து ஆற்றில்போய் சேரும் ஏரிக்கால்வாய்
வீட்டுக்குப் பின்னே..!!

இப்போது இல்லாமல் போய்விட்ட
இந்த ஏரிக்கால்வாய்தான் எங்கள்
அப்போதைய விளையாட்டுச் சொர்க்கம்..!!
கால்வாய் நீரை ஒட்டியபடி இருந்த மரப்பாலம்
கால் நனைத்தவாறு கனவுகளை அரங்கேற்றிய மேடை..!
வரிக் கேட்கவில்லை யாரும்
எங்கள் கனவுகளுக்கும் கப்பல்களுக்கும்...
வருடஞ்சென்றப் புத்தகப் பக்கங்கள்
கப்பல்களாகி எங்கள்
கனவுகளை சுமந்துச் சென்றன..
அந்த ஏரிக் கால்வாயில்..!
கால்வாய்க்கரைப் புளிய மரம் வெண்குடையானது..
சின்னஞ்சிறு மரப்பாலம் சிம்மாசனமானது...
கவலையின்றிக் கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தோம்
கால்களை உரசிப்போன மீன்களுக்கு!!
கால்வாய்த் தடம் கடந்துப் போனேன் ஏரிக்கரைக்கு..
மஞ்சள் பூக்கள் பஞ்சுப் பஞ்சாய்ப் பூத்திருக்கக்
 கொஞ்சி அலைப்பேசும் கருவேல ஏரி ஒருபுறம்...
தும்பிகள் விளையாடும் வயல்வெளிகளும்
வெயில் புகாதத் தோப்புகளும் மறுபுறம்..
நடுவில் நீண்ட ஏரிக்கரையில்
நாளும் நடந்தன எங்கள் இராஜ பவனிகள்..!!
நாங்கள் முடிசூடிக் கொண்டக்
காட்டு மல்லியின் வேர்கள்..
இன்னும் மிச்சமிருக்கலாம்..
எரிக்கரைக் கல்லுக்கட்டு இடுக்கில்..!!
வாசம் இன்னும் மிச்சமிருக்கிறது...
எங்கள் நாசிகளில்..!!
வீட்டு மல்லியில் வாசமில்லையென அழுதுக்
காட்டு மல்லியை மடிகட்டி
வீட்டுக்குக் கொண்டு வந்த வாசம்..!
திசைமாறிப் போன பின்னும்
சுவாசத்தில் மறையாத வாசம்..!!
கரையில் மேயும் வெள்ளாடுகளுக்கு ஊட்டிவிட
கருவேலங்காய்களைப் பறிக்கப் போய்
கைகளில் தைத்த முட்காயங்கள்..!
‘கொக்கே கொக்கே பூப்போடு!’ என
இல்லாதப் பூவை இட்டுப் போகுமென
இறைஞ்ச வைத்தக் கொக்குக் கூட்டங்கள்..!
தண்ணீரில் மூழ்கிப் பின் தலையை நீட்டி
அங்கே இங்கே எனக் கண்ணாமூச்சி ஆடி
நீந்தியத் தண்ணீர்த் தாரைகள்..!

இன்றுக் காலத்தால் மறைந்து போனவற்றை
அன்றுக் கண்களால் படமெடுத்துக் கொண்டோம்..!

கரையோர செல்லியம்மன் கோயில் அத்திமரத்தடியில்
கரையாமல் புதைந்துக் கிடக்கலாம்
கடைசியாக நாங்கள் பல்லாங்குழி ஆடிய
ஆமணக்குக் கொட்டைகள்..!!
மரக் கிளையின் மறையாதத் தழும்புகளில்
எங்கள் ஊஞ்சல் கயிற்றுத் தழும்பும் இருக்கலாம்..!!
தலையைத் தட்டிப் பறக்குமிந்தத் தட்டாம்பூச்சி
நாங்கள் விரட்டி விரட்டிப் பிடித்தத்
தட்டாம்பூச்சியின் பேரனாக இருக்கலாம்..!!
நீர்வடிந்த ஏரிக்கோடியில்..
காய்ந்த நீர்ப்பாசி விரித்த வெண்கம்பளத்தில்..
கொலிசுகள் சத்தமிட..
பாவாடை சரசரக்க...
நாங்கள் பதித்தக் கால்தடங்களைத் தேடுகிறேன்..!
புழுதிப் படிந்த இந்த மண்ணுக்குள்...
தொலைந்துப் போன எங்கள் கொலுசின்
முத்துக்களும் இருக்கலாம்..
எங்கள் கால்களைத் தைத்தக் கருவேல
முட்களும் இருக்கலாம்..
இதோ... இந்த ஏரி மண்ணுக்கடியில்தான்...
மறைந்துக் கிடக்கும் கருவேல வேர்களைப் போல..
புதைந்துக் கிடக்கிறது...
தேவதைகள் ஆண்ட ஒருக்காலம்..
எங்கள் நட்புக்காலம்..!!

1 comment: